நாட்டில் நிலவி வரும் தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22 அன்று பிறப்பித்த உத்தரவில், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் அமர்வு முடிவு செய்தது. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிபதிகள் விக்கிரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களும் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.