மும்பையில் ஒரு வீடு, ரூ.12 கோடி ரொக்கம் மற்றும் BMW கார் ஜீவனாம்சமாக கேட்ட பெண்ணுக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, படித்த பெண்கள், வேலையில் இருக்கும் பெண்கள், திறமையான பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜீவனாம்சம் என்ற பெயரில் கணவரிடம் இருந்து பணம் கேட்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த பெண் ஒருவர், தனக்கு மும்பையில் ஒரு வீடும், ரூ.12 கோடி ஜீவனாம்சத் தொகையும், ஒரு பிஎம்டபிள்யூ காரும் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்பெண்ணிடம் அதிரடியான கேள்விகளை எழுப்பினர்.
"நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லவர், எம்.பி.ஏ. முடித்திருக்கிறீர்கள். உங்களை போன்றவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏன் வேலை செய்யக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "உங்களுக்காக நீங்களேதான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதை மற்றவரிடம் எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் படித்தவர், உங்கள் படிப்பை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்று அந்த பெண்ணுக்கு நீதிபதிகள் அறிவுரையாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு, ஜீவனாம்சம் குறித்த வழக்குகளில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.