புனேயில் ஒரு பெண் ஐடி ஊழியர், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலியான புகார் அளித்ததை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 3ஆம் தேதி, அந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை ஒரு டெலிவரி ஏஜென்ட் போல் நடித்து ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, மயக்கமடைய செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது போனை பயன்படுத்தி செல்ஃபி எடுத்ததாகவும், இந்ச் சம்பவத்தை வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 'டெலிவரி ஏஜென்ட்' உண்மையில் அப்பெண்ணின் நண்பர் என்பதும், அவர் அப்பெண்ணின் சம்மதத்துடன்தான் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதன் மூலம், பாலியல் பலாத்கார புகார் பொய்யானது என்பதும், போலீசாரை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த பெண் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது உண்மையில் பாலியல் பலாத்கார வழக்கு அல்ல என்றும், போலீசாரை தவறாக வழிநடத்த ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.