ராஜீவ் காந்தியை கூலிப்படை வைத்து கொன்றனர் - அதிர்ச்சி கிளப்பும் சுவாமி

செவ்வாய், 13 மார்ச் 2018 (14:29 IST)
ராஜீவ் கொலையாளிகளை ராகுல் மன்னிப்பதில் உள்குத்து இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

 
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 25 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 
 
அந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ராஜீவ் கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரனுக்காகவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த திடீர் மாற்றம் அரசியல் கட்சி தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அவரை இதுவரை விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த கருத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி “அவர்கள் கொலை செய்தது ராஜீவ் காந்தியை அல்ல. நாட்டின் பிரதமரை. எனவே, அவர்களை மன்னிக்க முடியாது. இலங்கை அரசு கேட்டுக்கொண்டதால் அவர்களுக்கு உதவி செய்ய இந்திய ராணுவம் சென்றது. எனவே, அதை குற்றமாக கருத முடியாது. கூலிப்படை வைத்து ராஜீவ் காந்தியை கொன்றுள்ளனர். எனவே, ராகுல் குடும்பம் அவர்களை மன்னிக்கக் கூடாது. 
 
இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ‘புரிதல்’ உள்ளதாக தோன்றுகிறது. எனவே, இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். நளினியின் மகள் லண்டனில் படிக்கும் செலவை சோனியா காந்தி குடும்பமே செய்து வருகிறது. அவர்கள் மீது ஏன் இவ்வளவு கரிசனம்? இதில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்