கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்..! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

Senthil Velan
வியாழன், 25 ஜூலை 2024 (14:40 IST)
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  கடந்த 2011ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த நிலையில்,  இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாசித்த தீர்ப்பில், அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
 
1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ராயல்டி என்பது வரி என்று கூறியது தவறானது என்றும் மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதேபோல், நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்