காஷ்மீருக்கு அனுப்ப வேண்டியது மருத்துவர்களை; படைகளை அல்ல -யெச்சூரி கண்டனம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (22:42 IST)
காஷ்மீருக்கு உடனடியாக அனுப்ப வேண்டியது மருத்துவர்களை தானே தவிர, படைகளை அல்ல என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
 

 
நாடாளுமன்ற மழைக்காலகூட்டத் தொடர் திங்களன்று துவங்கியது. மாநிலங்களவையில் காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது பேசிய சீத்தாராம் யெச்சூரி, “காஷ்மீருக்கு நிறைய படைகளை அனுப்புகிறோமே தவிர, அங்கு தேவைப்படுவது மருத்துவர்களும் மருத்துவக் குழுக்களுமே என்பதை நாம் உணரவில்லை.
 
பாகிஸ்தானை குறை கூறிக்கொண்டேயிருப்பதில் பயனில்லை. அரசின் பொறுப்பு என்ன? நம்பிக்கையின்மையின் வேர் என்னவென்பதை ஆராயாமல் பாகிஸ்தானை குற்றம்சாட்டி ஒருவித பயனும் இல்லை. காஷ்மீரில் அதிகமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்தது யார் என்பது குறித்த விசாரணை தேவை என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
 
பொதுமக்களையும் பயங்கரவாதி போல் நடத்துவதா?
 
முன்னதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, "காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளை போல நடத்த வேண்டாம். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு எதிராக அளவுக்கதிகமான படைகளை பயன்படுத்த வேண்டாம். துப்பாக்கி குண்டுகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், பெண்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படுகிறது.
 
பயங்கரவாதிகளை நடத்துவதைப் போலத்தான் உள்ளூர்மக்களையும் பயன்படுத்த வேண்டுமா? பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே துப்பாக்கி குண்டுகளைத்தான் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்த வேண்டுமா? பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு நாங்கள் துணைநிற்போம். ஆனால், பொதுமக்களை நடத்தும் விதத்துக்கு துணையாக நிற்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்