நண்பர்கள் போல் பழகி லேப்டாப் மொபைல் போன் திருடும் திருடர்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (21:34 IST)
மாணவர்கள், தனியார் ஊழியர்களிடம் நண்பர்கள் போல் பழகி லேப்டாப், மொபைல் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் அறைகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கி உள்ளனர். சமீபகாலமாக அவர்களது அறைகளில் பூட்டு உடைக்கப்படாமல் அங்கே இருந்த விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் செல்போன்கள் மாயமாகி வந்தது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்துறையினருக்கு வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ராமாபுரம், காந்தி நகர் மெயின்ரோடு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் லேப்டாப்ப திருடர்கள் இவர்கள் தான் என தெரியவந்தது. மேலும், அவர்களில் ஒருவர் ராமாபுரம், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார்(32), மற்றொருவர், கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த கோபி(33), என்பதும் தெரியவந்த்து. அவர்கள் வாக்குமூலத்தில கூறியிருப்பதாவது, “வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுடன் பழகி நாங்களும் அவர்களுடன் சேர்ந்து தங்கி விடுவோம். சில நாட்கள் கழித்து அந்த அறையின் சாவியை போல் போலி சாவியை தயார் செய்து கொண்டு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் அறையின் கதவை திறந்து அறைக்குள் இருக்கும் செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை திருடி சென்று விடுவோம்.” என்றனர்.

திருடிய செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை பல்வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லேப்டாப்புகள், 6 செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அடுத்த கட்டுரையில்