
பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு சென்ற சசிகலாவை ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
காலையில் தேவர் நினைவிடத்திற்கு ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வந்தனர். பின்னர் அவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்துக் கொள்ள மூவருமாக சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின்னர் டிடிவி தினகரன் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் அங்கேயே காத்திருந்த ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும், தேவர் நினைவிடம் வந்த சசிக்கலாவை சந்தித்து பேசியுள்ளனர். சில மாதங்கள் முன்னதாக சசிக்கலா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை அவர்கள் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
எனினும் நீண்ட காலம் கழித்து சசிக்கலாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K