ரூபாய் நோட்டு விவகாரத்தில் வரும் கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய் என பாஜக எம்.பி.யும் நடிகருமான சதுருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் உத்தரவை அடுத்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட வேலைகளையும் விட்டு வங்கிகளில் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்தும் ரூ.2000 வரை மட்டுமே வங்கிகள் அளிக்கின்றனர். பொதுமக்களின் விரக்தியை அடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களின் கருத்தை அறிய மோடி ஆப் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு 93 சதவிகிதம் பேர் ஆப் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக மோடியும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நமது தாய்மார்கள், சகோதரிகள் ஆத்திர அவசரத்துக்காக சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் கறுப்புப் பணம் என்று ஒப்பிடுவது சரியல்ல. கறுப்புப் பண ஒழிப்புக்கு மக்கள் ஆதரவாக இருப்பதாக சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது பித்தலாட்டம். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதை முதலில் நிறுத்துங்கள். சாதகமாக கருத்துக்கணிப்புகள், கட்டுக்கதைகள் வெளியிடுவதையும் நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
சத்ருகன் சின்ஹா அத்வானியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.