ஆந்திர மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீது அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, தமிழ்நாட்டில் இருந்து போலி வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுப்படி, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், ஆந்திராவில் சாய் சந்தியா ராணி என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். மேலும், அதே பெயரில் நகரி நகராட்சியின் ஆறாவது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிட வைத்துள்ளதாகவும் தெலுங்கு தேசம் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, இரண்டு மாநிலங்களில் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் நகல்களையும், போலி வேட்பாளரான சாய் சந்தியா ராணிக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரபல நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்களையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ளது.