ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு பள்ளி சென்ற மாணவனை பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியதால், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளி முன் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அதிலாபாத் என்ற மாவட்டத்தில் உள்ள செயின் பால் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அபிநவ் என்ற மாணவர் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு காவி உடை அணிந்தபடி பள்ளி சென்றுள்ளார். இதனை அடுத்து அபினாவை பள்ளிக்குள் அனுமதிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் சீருடையுடன் வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது
இது குறித்து தகவல் அறிந்த ஆஞ்சநேய பக்தர்கள் விரைந்து சென்று பள்ளியை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்டு அபிநவ் காவி உடையுடன் பள்ளிக்கு வரலாம் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சில மணி நேரங்கள் பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.