பிரதமர் பக்கோடா பயிற்சி மையம்: பட்டைய கிளப்பும் சமாஜ்வாதி!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:34 IST)
ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதுவும் வேலைவாய்ப்புதானே என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது எதிர்க்கட்சிகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டது.
 
இந்நிலையில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு உத்தரப்பிரதேசம் மாநிலம் பரோலியில் துளசி பூங்கா அருகில் பிரதம மந்திரி பக்கோடா பயிற்சி மையம் என்ற பெயரில் பக்கோடா சமைக்கும் பயிற்சிக்கான வகுப்புகளை நடத்தியது சமாஜ்வாதி கட்சி.
 
இதில், பட்டதாரிகளுக்கு நான்கு விதமான பக்கோடா செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது. பி.டெக்., எம்.டெக். பட்டதாரிகளுக்கு மோடி பக்கோடாவும், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்.டி பட்டதாரிகளுக்கு அமித்ஷா பக்கோடாவும், எம்.காம் முடித்தவர்களுக்கு அருண் ஜேட்லி பக்கோடாவும், பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு யோகி பக்கோடாவும் சமைக்க கற்றுத்தரப்பட்டது.
 
சமாஜ்வாதி கட்சியில் இருப்பவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லாதபடியால், மூன்று சிறந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர் என சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அடா உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்