வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை சரியாக விசாரிக்காமல் முன்னணி ஊடகங்கள் கூட சில சமயம் தவறான செய்திகளை தெரிவித்து வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக வந்த செய்திதான். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது
சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியல் குறித்த தகவலை கேட்டிருந்தார். அவருக்கு தகவல் அளித்த ரிசர்வ் வங்கி, ‘வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் அளித்தது. அந்த பதிலில் நிலுவையில் உள்ள தொகை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூ. 68 ஆயிரம் கோடி என குறிப்பிடப்பட்டு இருந்ததை ரூ.68 ஆயிரம் கோடி கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
உண்மையில் ரூ.68 ஆயிரம் கோடி வாராக்கடன் தொகை வங்கிகளின் லாப நஷ்ட கணக்கில் சேர்க்கப்படுமே தவிர, இந்த தொகையை திரும்ப வசூலிக்கும் முழு உரிமையை வங்கிகள் இன்னும் இழந்துவிடவில்லை. ஆனால் இந்த தகவலை தெரிந்தோ, தெரியாமலோ தவறான செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது