பீகார் மாநிலத்தில், 24 வயது இளைஞர் ஒருவருக்கு அவருடைய அத்தையுடன் தகாத உறவு இருந்ததாக சந்தேகப்பட்ட ஒரு கும்பல், இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிதிலேஷ் குமார் என்ற 24 வயது இளைஞர், அவருடைய அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து, அத்தையின் உறவினர்களை சேர்ந்த ஒரு கும்பல் மிதிலேஷ் குமாரை கம்பு மற்றும் தடியால் அடித்து உதைத்ததோடு, அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது. அதன் பிறகு, அத்தை வரவழைக்கப்பட்டு, அவரும் தாக்கப்பட்ட நிலையில், அந்த கும்பல் இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்தது.
இது குறித்து மிதிலேஷின் தந்தை கூறுகையில், தனது மகனை தாக்கிய கும்பலை தானும் தனது மனைவியும் தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தங்களையும் தாக்கியதாகவும் தெரிவித்தார். தங்கள் மகனுக்கு முதுகு, கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தனது மகனை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது மிதிலேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால், அருகில் உள்ள உயர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.