பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக இன்று தாய்லாந்து செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாய்லாந்து பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை ஒருங்கிணைத்து பிம்ஸ்டெக் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆறாவது மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்.
அவருக்கு தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தாய்லாந்து அரசு மாளிகையில் இந்திய, தாய்லாந்து பிரதமர்களின் சந்திப்பு நடைபெறும் என்றும், அப்போது பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.