ஹத்ராஸ் பெண்ணை கொன்றது அவரது பெற்றோர்களா? – போலீசுக்கு வந்த கடிதம்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (14:43 IST)
ஹத்ராஸ் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும், பெண்ணின் பெற்றோர்களே அவரை கொன்றதாகவும் குற்றவாளிகளில் ஒருவர் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரில் சந்தீப் என்பவருடன் ஏற்கனவே ஹத்ராஸ் பெண்ணுக்கு பழக்கம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சந்தீப் போலீஸாருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில் ஹத்ராஸ் பெண்ணுக்கும், தனக்கும் பழக்கம் இருந்ததாக கூறியுள்ள சந்தீப், அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவது, மொபைல் போனில் பேசுவது என இருந்ததாகவும், ஆனால் இருவரும் நட்புடன் மட்டுமே பழகியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் சந்தித்து பேசுவது இளம்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் சம்பவத்தன்று வயலில் இளம்பெண்ணை சந்தித்து பேசிய போது உடன் பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் இருந்தார்கள். அதனால் இளம்பெண் என்னை அங்கிருந்து சென்று விடும்படி சொன்னார். நான் அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு நீண்ட நேரம் கழித்துதான் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு தெரிய வந்தது என கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண்ணை பெற்றோரே கொன்று விட்டு பழியை நால்வர் மீது சுமத்தியதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது மேலும் அதிர்ச்சியையும், வழக்கில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்