டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

Prasanth K

புதன், 6 ஆகஸ்ட் 2025 (10:17 IST)

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கூட்டுறவு சங்கங்களின் ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் மாவட்ட வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு சங்கம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம், கூட்டுறவு பண்டகசாலை என பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

 

இந்த கூட்டுறவு ஸ்தாபனங்களில் உதவியாளர், உதவியாளர் (எழுத்தாளர்), உதவி மேற்பார்வையாளர் என பல பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் பணியமர்த்தல் நடைபெறும்.

 

கல்வித்தகுதி:

 

இந்த பணியிடங்களில் சேர இளங்கலை (டிகிரி) ஏதாவது ஒரு பாடத்திட்டத்தில் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு நிலையங்களில் அளிக்கப்படும் Diploma in Cooperative management பயிற்சியை பெற்றவராக இருத்தல் வேண்டும். 

கல்லூரிகளில் பி.காம். எம்.காம், பிஏ, எம் ஏ படிப்புகளில் கூட்டுறவு பிரிவை எடுத்து படித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

 

வயது வரம்பு:

 

இந்த கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்),  மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு 32 வயது வரை வரம்பு உள்ளது. 

 

இதர வகுப்பை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரையும், இதர வகுப்பை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு 42 வயது வரையிலும் தளர்வு உள்ளது.

 

சம்பளம்:

 

இந்த கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு க்ரேடு முறைப்படி 24,000 முதல் 67,000 வரை கூட்டுறவு வங்கி பிரிவு மற்றும் பதவியை பொறுத்து வழங்கப்படும். முழுமையான சம்பள விவரங்களை கீழ்கண்ட அறிவிப்பில் காணலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்று திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.250 ரூபாயும், பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

DRB இணையதளமான drb.in தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.08.2025ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கான தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் உதவி மைய எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். 

 

குறிப்பு: உங்கள் மாவட்ட கூட்டுறவு சங்க வேலை அறிவிப்புகளை காண கூகுளில் drb என டைப் செய்து உங்கள் மாவட்ட பெயரை டைப் செய்து தேடினால் மாவட்ட வாரியான அறிவிப்புகள் கிடைக்கும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்