கால்பந்தை போல் அடித்து உதைத்து தலித் இளைஞர் காவல்நிலையத்தில் கொலை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:58 IST)
செவ்வாய்க்கிழமை இரவு, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் கமல் வால்மீகி (25) என்ற தலித் இளைஞரையும், அவரின் சகோதரர் நிர்மலையும், வழிப்பறி தொடர்பான புகாரில், விசாரிக்க காவல்துறையினர் அழைத்து வந்தனர்.


 


பின்பு, புறக்காவல் நிலையத்தில் வைத்து, காவல்துறையினர், அவர்களை இருவரையும், குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறியுள்ளனர். குற்றத்தை ஏற்க மறுத்த இருவரையும் காவல்துறையினர் கால்பந்தை உதைப்பது போல், உதைத்து, கம்பியால் அடித்து துன்புறுத்தி குற்றத்தை ஒப்புகொள்ள நிர்பந்தித்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை, கமல், லாக்-அப்பில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, புறக்காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து 15 காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கமல் கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் தலைமறைவாகிவிட்டனர். இதை அறிந்த பொதுமக்கள்,  காவல்நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்கினர்.

மேலும், கமலின் உடலை பிரேத பரிசோதனைக்காக் மருத்துவமைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், கமலின் பெயரை மாற்றி, ராஜு மிஸ்ட்ரி என்று குறிப்பிட்டுள்ளதும், தற்போது அம்பலமாகியுள்ளது.

போலீஸ் காவலில், இருந்த கமல், மரணமடைந்ததற்கு, காவலர்களுக்கு, வெறும் பணி இடைநீக்கம் போதாது என்றும்,  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயவதி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்