மகா கும்பமேளா பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், பிரயாகராஜ் விமான நிலையத்திலிருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 43 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
விமான நிலையத்திலிருந்து திரிவேணி சங்கமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, புனித நீராடிய பிறகு மீண்டும் பக்தர்கள் விமான நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்படுவார்கள். இதனால், நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் பக்தர்கள் புனித நீராடி திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த, ஒரு நபருக்கு ₹35,000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.