பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் சயிஃப் அலிகான் மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சயிஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சயிஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீஸார் 30 தனிப்படைகளை அமைத்து சயிஃப் அலிகானை குத்திய நபரை தீவிரமாக தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசராணையில் சயிஃப் அலிகானை குத்திய நபர் மும்பையிலிருந்து ரயில் வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பையிலிருந்து பிற மாநிலங்கள் செல்லும் ரயில்களை சோதனையிட தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து புறப்பட்டு நேற்று மதியம் சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலின் பொதுப்பெட்டியில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அதில் மும்பை போலீஸார் சொன்ன அடையாளத்துடனான நபரை கண்டறிந்து சத்தீஸ்கர் போலீஸார் பிடித்துள்ளனர்.
பின்னர் வீடியோ கால் மூலமாக அந்த நபர்தான் குற்றவாளியா என்பதை மும்பை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து வர மும்பை போலீஸார் சத்தீஸ்கர் விரைந்துள்ளனர். அந்த நபரை விசாரித்தால் திருட்டிற்காக சென்றபோது கொலை முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K