போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Siva

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (11:03 IST)
வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில், இந்த பண்டிகையையொட்டி, போக்குவரத்து விதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண் போலீசார் ஒரு நூதனமான முயற்சியில் ஈடுபட்டனர்.
 
ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுதல், சிக்னலை தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை, பணியிலிருந்த பெண் போலீசார் மடக்கினர். அவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் தேசிய கொடியையும் பரிசளித்தனர்.
 
ராக்கி கட்டியதோடு மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை, ஆண் போலீசார் விதித்தனர்.
 
போலீசாரின் இந்த நூதனமான நடவடிக்கை, டெல்லி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு புதிய விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அன்பின் பிணைப்பை குறிக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகையை, சாலை பாதுகாப்போடு இணைத்து போலீசார் நடத்திய இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்