மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசமா? முதல்வரின் அதிரடி திட்டம்!

திங்கள், 3 ஜூன் 2019 (07:17 IST)
மெட்ரோ ரயிலிலும் அரசு பேருந்திலும் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைக்க பல கவர்ச்சிகரமான திட்டங்களை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
 
அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரயில்களிலும் டெல்லி அரசு பேருந்துகளிலும் பயணம் செய்யும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான செலவினங்கள், இழப்பு குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் டெல்லி அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
டெல்லியில் மட்டும் தினமும் 30 லட்சம் பேர் மெட்ரோ ரயிலிலும் அரசு பேருந்துகளிலும் பயணம் செய்கின்றனர். இதில் சுமார் 7.5 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்