அமெரிக்காவின் விர்ஜீனியா மாநில அரசு கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு - 12 பேர் உயிரிழப்பு
சனி, 1 ஜூன் 2019 (21:33 IST)
அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அரசு கட்டடம் ஒன்றில் "பாரபட்சம் இன்றி" அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரியின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் போலீஸாரால் கொல்லப்பட்டார்.
காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் காவல்துறையை சேர்ந்தவர்.
எப்போது நடைபெற்றது?
விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நகராட்சி மையக் கட்டடத்தில், உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணிக்கு அந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
அந்த பகுதியில் பல அரசு கட்டடங்கள் இருக்கின்றன. தற்போது அந்த பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும் அங்குள்ள ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
"அங்குள்ளவர்களை கீழே இறங்கி வருமாறு பலர் கூச்சலிட்டனர்" என சம்பவத்தை நேரில் பார்த்த அந்த கட்டடத்தின் நிர்வாக உதவியாளராக இருக்கும் மேகன் பாண்டன் உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
மற்றொரு ஊழியர், தானும் மற்றவர்களும் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதாகவும், ஆனால் அது இவ்வளவு அருகில் நடைபெற்றிருக்கும் என தாங்கள் நினைக்கவில்லை எனவும் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 12 பேரின் அடையாளங்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
காவல்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட இந்த சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
'விர்ஜீனியா பீச்' அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நகரம். அதில் 4 லட்சத்து நாற்பதாயிரம் பேர் வாழ்கின்றனர்.
இந்த செய்தியை கேட்டதும் தான் பெருந்துயர் அடைந்ததாக விர்ஜீனியாவின் செனட்டர் டிம் கைன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலம் மற்றும் நகரில் நடந்த மோசமான சம்பவம் இது என விர்ஜீனியாவின் ஆளுநர் ராஃப் நார்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல்களை கொண்ட வலைதளத்தின்படி, இது அமெரிக்காவில் 2019 ஆண்டுவரை நடைபெற்ற 150ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகும்.