பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு அறிவித்தது. மேலும், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான உச்சவரம்பு ரூ.4 ஆயிரம் என தெரிவித்தது.
பின்னர் உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது. இதற்கிடையில், ஒருவரே அடிக்கடி வங்கியில் பணம் எடுப்பதை தவிர்க்க, இனி வங்கி கவுண்டர்களில் பணம் எடுக்க வருபவர்களின் கையில் மை வைக்கப்படும் என மத்திய நிதித்துறை அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு இன்று [24-11-16] கடைசி நாள் ஆகும். தவிர 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், பொதுமக்கள் பணத்தை மாற்றிக்கொள்ளாத பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கிலோ, வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலமாகவோ செலுத்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை, மத்திய அரசு கால வரையறை செய்துள்ளது.
ஆனால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோல் பங்க், சுங்க கட்டணம், குடிநீர் மற்றும் மின் கட்டணம், அரசு மருத்துவமனை, மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்), கேஸ் சிலிண்டர் வாங்க, மெட்ரோ, புறநகர் ரயில்களில் கட்டணம் செலுத்த, பேருந்து மற்றும் விமான கட்டணம் செலுத்த மற்றும் செல்போன் ரீசார்ஜ் ஆகிய சேவைகளுக்கு மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.