சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதற்கு தக்க பாடம் புகட்டும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகளுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
காரணம், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினர். இதில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
அதனால், இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய பிற சார்க் உறுப்பு நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன.
சார்க்கில் உறுப்பினர்களாக உள்ள 8 நாடுகளில் 5 நாடுகள் புறக்கணிப்பதாக தெரிவிததை அடுத்து, வேறு வழியின்றி சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.