இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவின் அடிப்படையில், இன்று முதல் அதாவது மே 1 முதல் ஏ.டி.எம். பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிகள் படி, வாடிக்கையாளர் பரிந்துரைக்கப்பட்ட இலவச வரம்பை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வங்கிகள் இடையேயான ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டணங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இதன்படி, வாடிக்கையாளர் தனது வங்கிக்கு சார்பில்லாத ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும்போது, குறிப்பிட்ட இலவச வரம்பிற்குப் பிறகு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ நகரங்களில் ஐந்து முறையும், பிற பகுதிகளில் மூன்று முறையும் மட்டும் இலவசமாக பரிவர்த்தனை செய்ய அனுமதி உண்டு.
மேலும், ரொக்கம் எடுத்தல் அல்லாத பரிவர்த்தனைகளான பேலன்ஸ் தெரிந்து கொள்தல், மினி ஸ்டேட்மென்ட் பிரிண்ட் எடுப்பது போன்றவற்றுக்கும் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.6-இல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண மாற்றங்கள் இன்று முதல் நடைமுறையில் வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் தேவையற்ற முறையில் ஏ.டி.எம். பரிவர்த்தனை செய்வதை தவிர்த்து, இலவச வரம்பை கடக்காமல் இருக்க வேண்டும். அதேசமயம், இணைய வழி பரிவர்த்தனைகள், மொபைல் வங்கி சேவைகள் போன்ற டிஜிட்டல் முறைகளை அதிகம் பயன்படுத்துவது, கூடுதல் கட்டணங்களை தவிர்க்க உதவும்.