புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக பொருளாதார விவகாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அந்த பணத்தை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் மோடி 8-ஆம் தேதி அறிவித்தார். இதனால் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளும், வரவேற்பும் உள்ளது இந்த அதிரடி திட்டத்திற்கு. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தான் தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய 1000 ரூபாய் பற்றி தகவல் சொல்லப்படவில்லை.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என கூறினார். புதிய வடிவத்தில், புதிய வண்ணத்தில் 1000 ரூபாய் நோட்டு வெளியாகும் என்றார். மேலும் இந்த புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியாக சில மாதங்களாகும் என்றார் சக்திகாந்த தாஸ்.