மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தியதை போலவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் அனில் டி சாகஸ்ரபுது என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'இந்த ஆண்டே பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கிவிட்டது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வரும் 2019-2020ஆம் ஆண்டில் கண்டிப்பாக பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத சிரமப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து அவர்களுக்காக தனி பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதனால் கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவையும், உயர் கல்வி முறைகளும் மேம்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பொறியியல் கல்லூரியில் புதியதாக வேலைக்குச் சேரும் விரிவுரையாளர்களுக்கும் நான்கு முதல் ஆறு வாரக் கால பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். மேலும், பொறியியல் படிப்பில் கேள்வித்தாள்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்' என்றும் சொல்லி இருக்கிறார் அனில் டி சாகஸ்ரபுது.