விமானியின் அறைக்குள் இரண்டு பயணிகள் அத்துமீறி நுழைய முயன்றதை அடுத்து, டெல்லி-மும்பை விமானம் 7 மணி நேரம் தாமதமாக கிளம்பியதாகக் கூறப்படும் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லவிருந்த விமானம் ஒன்று நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கான ஆயத்த பணிகளை விமானிகள் மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு பயணிகள் விமானிகளின் அறைக்குள் நுழைந்து அத்துமீறியதாகவும், விமானிகள் "உங்கள் இருக்கைக்கு செல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டபோதிலும் அவர்கள் தொடர்ந்து அத்துமீறியதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, விமானிகள், விமானப் பணியாளர்கள், சக பயணிகள், கேப்டன் ஆகியோர் தொடர்ச்சியாக அந்த இரண்டு பயணிகளையும் தங்கள் இருக்கைக்கு செல்லுமாறு அறிவுரை கூறிய நிலையில், இரண்டு பயணிகளும் அதைக் கேட்கவில்லை. அப்போது விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், இருவரையும் வலுக்கட்டாயமாக விமானப் பணியாளர்கள் விமானியின் அறையில் இருந்து வெளியே அனுப்ப முயற்சி செய்தனர். இதனை அடுத்து இருவரும் தொடர்ச்சியாகப் பிடிவாதம் பிடித்ததால், மீண்டும் விமானம் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் அந்த இரண்டு பயணிகளும் இறக்கிவிடப்பட்ட நிலையில், விமான நிலைய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் காரணமாக டெல்லி-மும்பை விமானம் சுமார் 7 மணி நேரம் தாமதமாக சென்றதாகவும், மதியம் 12:30 மணிக்குக் கிளம்பவிருந்த விமானம் இரவு 7:30 மணிக்குத்தான் கிளம்பியது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.