நிலவிற்கு கீழே நேர்கோட்டில் தோன்றிய கோள்கள்? – வியந்து பார்த்த மக்கள்!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (09:12 IST)
கடந்த சில நாட்களாக நிலவிற்கு நேர் கீழே ஒரே நேர்கோட்டில் புதிதாக இரண்டு ஒளிமிக்க கோள்கள் தோன்றுவதை மக்கள் வியப்புடன் கண்டுகளித்து வருகின்றனர்.

வானவியல் நிகழ்வுகளில் அவ்வபோது சூரிய குடும்பத்தின் கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது. அதுபோன்ற நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனும், சூரியனுக்கு அருகே இரண்டாவதாக உள்ள கோளான வெள்ளி (வீனஸ்) ஒரே நேர்கோட்டில் சந்தித்துள்ளன. நேற்று மாலை நிலவுக்கு நேர்கீழே வியாழன் மற்றும் வெள்ளி ஒரே நேர்கோட்டில் காட்சி அளித்தன. அது இன்ன கிரகம் என்று தெரியாவிட்டாலும் இந்த அதிசய வானியல் நிகழ்வை மக்கள் பலர் கண்டு வியந்துள்ளனர். விடியற்காலையில் மட்டுமே வெள்ளி தோன்றும் என கூறப்படும் நிலையில் மாலை பொழுதில் வெள்ளியை கண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதை பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இன்று ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி கிரகங்களை காணலாம் என்றாலும் நிலவு அதன் நேர்கோட்டில் சந்திக்குமா என்பது தெரியவில்லை. சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் அதனதன் வெவ்வேறு நீளமுள்ள வட்டப்பாதைகளில் சுற்றி வரும் நிலையில் மிக அரிதாக இதுபோல ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் வானியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்