மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கொண்டு வர ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (19:23 IST)
மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கொண்டு வரட்டும் என ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
 
ஆக்ராவில் சமீபத்தில் ஏழை இஸ்லாமியர்கள் சிலர் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்திய நிலையில், கட்டாய மதமாற்றம் செய்வதை பாஜக எதிர்க்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று காலை கூறியிருந்த நிலையில், தற்போது மதமாற்றம் தொடர்பாக மோகன் பகவத்தும் வாய் திறந்துள்ளார். 
 
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மோகன் பகவத், " மதமாற்றத்தை நீங்கள் விரும்பவில்லை எனில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வாருங்கள். 
 
மற்ற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறுவதை எதிர்ப்பவர்கள், இந்து மதத்திலுள்ளவர்களை மற்ற மதங்களுக்கு மாற்றுவதையும் நிறுத்த வேண்டும். ஒருவர் இந்துவாக மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்துக்களையும் மாற்றக்கூடாது.
 
அதே சமயம் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவோம். இந்து சமாஜ் விழித்துக்கொண்டுவிட்டது. யாருக்காகவும் பயப்படாது. நாங்கள் (இந்துக்கள்) இந்தியாவுக்குள் எங்கிருந்தோ வரவில்லை. இது எங்களது இந்து தேசம்" எனக் கூறியுள்ளார்.