சபரிமலை விவகாரம் – கேரளாவில் மோடி கொந்தளிப்பு

புதன், 16 ஜனவரி 2019 (09:15 IST)
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான தடைநீக்கத்திற்குப் பிறகான போராட்டங்களைக் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகக் கையாளவில்லை என மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு பல வருடங்களாக பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் உச்சநீதி மன்றம் பெண்களுக்கு அனுமதி அளித்து கோயிலுக்குள் செல்லலாம் என அறிவித்ததை அடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தடைக்குப் பிறகு பெண்கள் கோயிலுக்குள் செல்ல முற்பட்ட போது இந்து அமைப்புகள் பல வகைகளில் அவர்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. இந்து அமைப்புகளுக்கு பாஜக வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சபரிமலை விவகாரத்திற்குப் பிறகு முதன் முறையாக கேரளவிற்கு நேற்று சென்ற பிரதமர் மோடி இது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் ‘இடதுசாரி அரசு ஆன்மிகத்தையும், மதத்தையும் ஒருகாலத்திலும் மதித்ததில்லை. ஆனால் சபரிமலை விவகாரத்தில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நடவடிக்கைகள் வரலாற்றிலேயே எந்தவோர் அரசும் செய்யாத்தாகும்.’ எனக் குற்றம் சாட்டினார்.

மேலும் காங்கிரஸ் குறித்து ‘சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. அது, தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்’ எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்