தென் அமெரிக்க நாடான பெரு தலைநகரில், ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலை ஓட்டிய டிரைவர், தூரத்தில் தண்டவாளத்தில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, அவர் ரயிலின் வேகத்தை குறைத்தார்.
ஆனாலும், ரயில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவர் மீது சக்கரங்கள் ஏறாமல், சிறிது தொலைவு வரை இழுத்துச் சென்றது. பின்னர், தூக்கி எறியப்பட்டது.
இதனை அடுத்து, அந்த வாலிபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதல் கட்ட விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ஜுவான் கார்லோஸ் டெல்லோ என்பதும், மது போதையில் தண்டவாளத்தில் அசந்து தூங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.