ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே நேற்று 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து 13 அடி உயர சுனாமி அலைகள் உருவானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் கடலின் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் அவசரகால அமைச்சர், இந்த நிலநடுக்கத்தால் சுமார் 12 அடி உயர சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் காரணமாக கம்சட்கா பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பெரிய கட்டிடங்கள் உட்பட பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அருகிலுள்ள சில பசிபிக் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசரகால அமைச்சர், பொதுமக்கள் அனைவரும் நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது ஆறுதலான செய்தி. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.