மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 46 வயது ஆசிரியை ஃபரா தீபா, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள், "ஒரு படித்த ஆசிரியை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?" என்று கண்டனம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரா தீபா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தியானது, இந்தியாவை இழிவாக சித்தரிக்கும் வகையிலும், தன்னை பாகிஸ்தானுடன் அடையாளப்படுத்தும் வகையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நீதிபதிகள், "பதிவின் நோக்கம் என்ன என்பது தெளிவாகப் புரிகிறது. ஒரு பகுத்தறிவுள்ள, ஆசிரியராக பணிபுரியும் நபர், சமூக ஊடகங்களில் இத்தகைய செய்தியை பதிவிடுவதற்கு முன், அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை பற்றி சிந்திக்க வேண்டும்" என்று கடுமையாக கண்டித்தனர்.
ஆசிரியை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஃபரா தீபா இந்த பதிவை செய்யும்போது மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கிவிட்டதாகவும், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதாகவும் வாதிட்டார். மேலும், அவர் தனது ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இருப்பினும், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், பொது உணர்வுகளைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதால் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.