மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் 26 வயது கார்த்திக் செல்வம். இவர் தையல் வேலை செய்து கொண்டு, ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நேற்று அவர் வாடிப்பட்டி - சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் திடீரென மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரயில்வே துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கார்த்திக் செல்வம் ரயில் மோதி இறந்தாரா, அல்லது யாராவது அவரை ரயிலில் தள்ளிவிட்டார்களா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.