இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, பிரபல தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோக்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் சமீபத்தில் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வகையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பெல்ஜியம் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. அந்த கோரிக்கையை பெல்ஜிய அரசு ஏற்று, சட்ட நடவடிக்கையாக சோக்ஸியை கைது செய்தது.
சுமார் ரூ.13,500 கோடி அளவிலான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், நீரவ் மோடியுடன் இணைந்து மெஹுல் சோக்ஸியும் பெரும் பங்காற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 2018ஆம் ஆண்டு இந்த மோசடியை அடுத்து இருவரும் இந்தியாவிலிருந்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இதில், நீரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்ததோடு, மெஹுல் சோக்ஸி கரிபியன் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவை அடைவாகக் கொண்டார்.
தற்போது, மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியத்திற்கு வந்திருந்த சோக்ஸியை அந்நாட்டு போலீசார் கைதுசெய்துள்ளனர். அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மூன்று வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனுடன், சிபிஐயும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.