இருவருக்கும் ஒரே கணவன்.. பேஸ்புக் தோழியின் மூலம் உண்மை அறிந்த இளம் பெண்..!

Siva

புதன், 12 பிப்ரவரி 2025 (08:04 IST)
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது முகநூல் தோழியின் மூலம், இருவருக்கும் ஒரே கணவன் என்பதை கண்டுபிடித்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்ததால், அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபு பிலிப் என்பவர் இதுவரை நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில், ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகி, இரண்டாவது முறை ஒரு பெண்ணை திருமணம் செய்து தமிழகத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பிறகு, அவரையும் ஏமாற்றிவிட்டு, எர்ணாகுளத்தை சேர்ந்த பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

நான்காவது முறையாக, ஆலப்புழாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் முகநூல் பழக்கம் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நான்காவது மனைவிக்கு அவருடைய இரண்டாவது மனைவியுடன் முகநூல் நட்பு இருந்தது. இருவரும் தங்கள் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட போது, இருவருக்கும் ஒரே கணவன் என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான்காவது மனைவி, காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், தீபு பிலிப் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்