மத்திய பிரதேசத்தில் தனக்கு திருமணம் செய்து வைக்காததால் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அப்துல் அகமது பர்ஹான். இவருக்கு 32 வயதாகியும் திருமணம் செய்து வைக்காமல் இருப்பதால் அவரது தாய் அஸ்மா பரூக்கிடம் அடிக்கடி வாக்குவாதம், சண்டை செய்து வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு சரியான வேலை இல்லாததால் வேலைக்கு சென்றால்தான் திருமணம் செய்ய முடியும் என அவரது தாய் கூறியதாக தெரிகிறது. அகமது பர்ஹான் மொபைலில் அமானுஷ்யம் மற்றும் மந்திரவாதம் குறித்த வீடியோக்களை அடிக்கடி பார்ப்பதுடன் அதை நம்பியும் இருந்துள்ளார்.
அதனால் தனது தாய் ஒரு சூனியக்காரி என்றும், அவர் தனது திருமணத்தை திட்டமிட்டு தடுப்பதாகவும் அவர் நம்ப தொடங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அகமது பர்ஹானின் அண்ணனும், அண்ணியும் வெளியே சென்றுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பர்ஹான் தனது தாயை கிரிக்கெட் மட்டையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை செய்துள்ளார்.
வீட்டிற்கு வந்த தனது சகோதரனிடம் தாய் மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது பர்ஹான் முன்னுக்கு பின் முரணாக உளறியுள்ளார். பின்னர் போலீஸ் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மூடநம்பிக்கையால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.