ஹரியானாவின் குருகிராம் நகரில், மனைவியுடன் தொலைபேசியில் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஹரிஷ் சர்மா என்பவரை அவரது காதலி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமைச் சேர்ந்த ஹரிஷ் சர்மாவுக்கு (40) திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஹரிஷ் சர்மா அடிக்கடி அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதற்கிடையில், யாஷ்மீன் கவுர் என்ற இளம் பெண்ணுடன் ஹரிஷ் சர்மாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஹரிஷ் சர்மா தனது மனைவியுடன் செல்போனில் பேசுவதை கண்டு யாஸ்மீன் கவுர் கடும் கோபம் அடைந்துள்ளார். தான் உடன் இருக்கும்போது ஏன் மனைவியுடன் பேசுகிறீர்கள் என்று இருவரும் வாக்குவாதம் செய்துவந்துள்ளனர்.
சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையின் உச்சத்தில், யாஷ்மீன் கவுர் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து ஹரிஷ் சர்மாவின் மார்பில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், யாஷ்மீன் கவுரை கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக விஜய் என்ற மற்றொரு நபரும் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.