திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் விலங்குகளின் கொழுப்பை கலந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் அதன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்று கூறினார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் சட்டம் ஒழுங்கை திசை திருப்புவே லட்டு பிரச்சனையை எழுப்பி உள்ளதாகவும் ஜெகன்மோகன் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என குறிப்பிட்ட அவர், அரசியலுக்காக கடவுளின் பெயரை சந்திரபாபு நாயுடு பயன்படுத்துவது கீழ்த்தரமானது என்று விமர்சித்தார். சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்தும் மக்களை திசை திருப்பும் கட்டுக்கதைகள் என்றும் முதல்வராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொய் கூறுவது நியாயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.