இந்தியா முழுவது உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதேசமயம் 234 தொகுதிகளில் வென்ற இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து வரும் ஜூன் 8ம் தேதியன்று மாலை பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளார். மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக தொடர வேண்டும் என பாஜக கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் சமீபமாக பிரதமர் மோடி ஆன்மீகரீதியில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதனால் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகிக்க அவர் விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். மேலும் பாஜகவின் எழுதப்படாத விதிகளின்படியே ஒருவர் இருமுறைக்கும் மேல் ஒரு பதவியை வகிக்கும் வழக்கமில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
எனினும் அவர் தொடர்ந்து ஆன்மீகத்தை மக்கள் சேவையுடனே ஒப்பிட்டு பேசி வருவதால் இந்த முறையும் அவரே பிரதமராக பதவி ஏற்பார் என பாஜக வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் தற்போது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் மோடி போன்ற அரசியல் வலிமைக் கொண்ட தலைவர் பிரதமராக இருந்தால்தான் கூட்டணி கட்சிகளை சமாளிக்க முடியும் என பாஜகவினர் விரும்புகின்றனராம். இன்று மாலை பாஜக கூட்டணி கட்சிகள் சந்திப்பிற்கு பிறகு பிரதமராக பதவியேற்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.