கேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர்கூடம். இந்த பகுதி கடல்மட்டத்தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அகஸ்தியர் முனிவர் அந்த மலையில் தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்கள் நம்புவதால் அகஸ்தியர் கூடம் என அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்தியருக்குக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டு காலம் காலமாக அந்த பழங்குடியினரால் வணங்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் சபரிமலை போலவே அங்கும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இதை எதிர்த்து மலப்புரத்தைச் சேர்ந்த ‘விங்ஸ்’ என்ற பெண்கள் நலஅமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த ‘அன்வேஷ்’ என்ற மகளிர் நல அமைப்பும் தடையை நீக்க வேண்டும் எனக் கோரி கேரள உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘பாலின அடிப்படையில் அகஸ்தியர்கூடத்திற்குப் பெண்கள் செல்லவதற்கு தடைவிதிக்க முடியாது. அனைத்துப் பெண்களும் மலைக்குச் செல்லலாம்’ எனத் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கேரள வனத்துறை அகஸ்தியர்கூட மலைக்கு டிரக்கிங் செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவை நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இதனையடுத்து வரும் 14-ம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்துக்குச் செல்ல உள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் இந்த டிரக்கிங் பயணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள வனத்துறை..