கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ பேசிய கருத்தை, பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் டிவி சேனல்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், சித்தராமையாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும், பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டும், பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நாங்கள் போரை ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு, போருக்கு எதிராக இந்தியாவிலிருந்து வரும் குரல் என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து பாஜக கூறியபோது, பாகிஸ்தான் ரத்னா முதல்வர் சித்தராமையா அவர்களே, உங்கள் குழந்தை தனம் மற்றும் அபத்தமான அறிக்கையால் ஒரே இரவில் பாகிஸ்தானில் உலக புகழ் பெற்றுள்ளீர்கள், வாழ்த்துக்கள் என கூறியுள்ளது.
நீங்கள் எப்போது பாகிஸ்தான் சென்றாலும் அந்த நாட்டினர் உங்களுக்கு சிறப்பு விருந்து அளிப்பார்கள் என்றும், பாகிஸ்தானுக்காக வாதிட்ட ஒரு சிறந்த அமைதி தூதராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவது இல்லை என்றும் பாஜக கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் முதலில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.