14 நாடுகளுக்கு கூடுதல் வரி.. இனி மாத்த மாட்டேன்! - இடியை இறக்கிய ட்ரம்ப்!

Prasanth K

புதன், 9 ஜூலை 2025 (16:28 IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பிற்கான தற்காலிக நிறுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் வரிகள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளுடனான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த நிலையில், சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவுக்கு வரியை அதிகரிக்க, இரு நாடுகளும் வரியை அதிகரித்துக் கொண்டே செல்ல பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பை வரும் 9ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

 

தற்போது அந்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு புதிய வரி ஒப்பந்தங்களை மேற்கொள்ள ட்ரம்ப் தயாராகியுள்ளார், அதேசமயம் தன்னுடன் உடன்படாத நாடுகளுக்கு வரியையும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டுள்ளார்.

 

அதன்படி, 14 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அதிக வரிவிதிப்பை ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், இந்தோனேசியா, வங்கதேசம், கம்போடியா, தாய்லாந்து, செர்பியா, மலேசியா, துனிசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

 

மேலும் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய வரி விகிதத்தில் எந்த மாற்றமோ அல்லது நீட்டிப்போ செய்யப்படாது என்று ட்ரம்ப் உறுதியாக கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்