நாட்டிற்கு வேலைவாய்ப்பு வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைக்கு உள்ளாக்க கூடாது என்று அதானி விவகாரம் குறித்து ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியதில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் முழுமையாக இயங்கவில்லை.
இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஜக்கி வாசுதேவ் தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து உள்ளார். “உலகின் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருக்க விரும்புகிறது. ஆனால், இந்திய பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுவதை பார்த்து வருத்தப்படுகிறேன்.
இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைக்கு உள்ளாக்க கூடாது. ஒருவேளை அவர்கள் மீது முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் தீர்வு காணலாம். ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாட கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.