ஸ்ரீதேவியின் உடல் வர இன்னும் 2-3 நாட்கள் ஆகும் - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (11:39 IST)
நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு இன்னும் ஒரிரு நாட்கள் ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் இன்னும் மும்பைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வந்துவிட்ட போதிலும், துபாய் போலீசார் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணையை இன்னும் முடிக்காததால் ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர். அனைத்து விசாரணையும் முடிந்த பின்பே, அவரை உடலை பதப்படுத்தி இந்தியா எடுத்து செல்ல அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அனுமதி வழங்குவார். அந்த அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
 
எனவே, அவர் அனுமதி அளித்து பின்பே ஸ்ரீதேவியின் உடல் என்பாஃர்மிங் (பதப்படுத்துதல்) செய்யப்படும். அதன்பின், அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு, அவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நவ்தீப்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
 ஸ்ரீதேவியின் மரணத்தில் ஊடகங்கள் காட்டும் ஆர்வம் புரிகிறது. ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் வலியை நாங்கள் பகிருந்து கொள்கிறோம். எங்களின் முன் அனுபவப்படி அனைத்து நடைமுறைகளும் முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும்.  ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணங்களை நிபுணர்கள் கண்டறியும் வரை பொறுத்திருப்போம். அது நம் கடமை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்