இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 400 பேர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து 400 டிரைனி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு இன்போசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், மைசூர் கேம்பஸில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமான பயிற்சி மற்றும் தேர்வுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள் தேர்வுகளில் மூன்று முறை தோல்வி அடைந்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இது வேலை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், மேலும் இந்த தேர்வு செயல்முறை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ட்ரெயினி ஊழியர்கள் சுமார் 50 பேர் கொண்ட குழுக்களாக அழைக்கப்பட்டு, பணிநீக்கம் கடிதங்களில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்வு மிகவும் கடினமானதாக இருப்பதால், தோல்வி அடையவே வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது என்று பணிநீக்கம் செய்யப்பட்ட ட்ரெயினி ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று மாலை 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.