தாக்குதலுக்கு பதிலடி- பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 % வரி !

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (13:50 IST)
புல்வாமாத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூறி பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைக் குறித்து  விவாதிக்க இன்னும் சில தினங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறது. மேலும் பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

முதல் கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரிவிதிப்பு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு அரிசி, பழங்கள், சிமென்ட்இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றிற்கான வரி இப்போது இருமடங்காக அதிகமாகி உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு 3400 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‘வர்த்தக நட்பு நாடு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் அனைத்திற்கும் உடனடியாக 200 % வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது ‘ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்