சமீப காலமாக இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது குறித்து பல்வேறு வாதங்கள் நடந்து வருகிறது. பல மத்திய அரசு அறிக்கைகளில் அவ்வபோது பாரத் என குறிப்பிடப்படுவதை எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையே மாற்றப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையாக அசோகத் தூணில் உள்ள நான்கு தலை சிங்கம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்து மதத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரியின் படம் இலச்சினையாக இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலச்சினை மாற்றத்திற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.